×

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்

திருவாரூர், ஏப். 28: திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மையம் செயல்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூரில் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் இயங்கி வருகிறது. இங்கு வெளிநோயாளிகளாக தினந்தோறும் 1200க்கும் மேற்பட்டவர்கள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். உள்நோயாளிகளாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி நாகை மற்றும் மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களிலிருந்தும நோயாளிகள் மேல்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு இங்க வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல் அவசர சிகிச்சை பிரிவிற்கு திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்து சென்ற வண்ணம் இருந்து வருகின்றனர். மேலும் தஞ்சை மற்றும் நாகை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் விபத்துகளின் காரணமாக பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விபத்துகளின் போது தலையில் ஏற்படும் காயத்திற்கு மட்டுமின்றி உயர் ரத்த அழுத்தம் காரணமாக மூளையில் ரத்த கசிவு மற்றும் மூளையில் ஏற்படும் கட்டி உட்பட பல்வேறு வகைகளில் சிகிச்சை அளிப்பதற்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் என்பது முக்கியமாக இருந்து வருகிறது. எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனைக்கு பின்னரே அதற்குரிய சிகிச்சையினையும் மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இங்கு தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் இயங்கி வந்த எம்.ஆர்.ஐ ஸ்கேன் மையம் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் பழுது காரணமாக இயங்காததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனை உடனடியாக சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் பொது நல அமைப்பினர் உட்பட பலரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அரசு சார்பில் ரூ.8 கோடியே 5 லட்சம் மதிப்பில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகியும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவியை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை நிர்வாகத்திற்கும் பொது மக்கள் மற்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur Government Medical College Hospital ,Tiruvarur ,Dinakaran ,
× RELATED திருவாரூர் அருகே போலீசார் அதிரடி